பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி.. செப்.17 முடிவு எடுக்க ஜிஎஸ்டி கவுன்சில் திட்டம்..! 

இந்திய மக்களுக்கும், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் சுமையாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜிஎஸ்டி அமைப்பிற்குள் கொண்டு வரவும் பல முறை மாநில அரசுகளும், மக்களும் மத்திய அரசுக்குப் பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்விதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.

இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்கள் விற்பனை மூலம் அதிகளவிலான வரி வருமானத்தை ஈட்டி வருகிறது. இதை இழந்தால் மத்திய அரசின் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

இதனால் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்து பல வருடங்கள் ஆன பின்பும் பெட்ரோல், டீசல் உட்பட அனைத்துப் பெட்ரோலியம் பொருட்களையும் ஜிஎஸ்டி அமைப்பிற்குள் சேர்க்காமல் இருந்தது.

இந்நிலையில் இந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் பெட்ரோல், டீசல் உட்பட அனைத்துப் பெட்ரோலியம் பொருட்களையும் ஜிஎஸ்டி அமைப்பிற்குள் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளது

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

லக்னோவில் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் 3 முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

  • பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் அதிகமான பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டி கட்டமைப்பிற்குள் கொண்டு வர ஆலோசனை செய்யப்பட உள்ளது.

  • கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் முக்கியமான மருந்து மற்றும் உபகரணங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த வரி தளர்வுகளைத் தொடர்வது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

  • இந்தியாவில் தற்போது பதிவு செய்யப்பட்டு உள்ள 80 லட்சம் நிறுவனங்களுக்குக் கட்டாய ஆதார் அங்கீகாரத்தை எப்படி அளிப்பது என்பதற்கான திட்டத்தையும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.

கேரளா உச்ச நீதிமன்றம்

கேரள உச்ச நீதிமன்றம் ஜூன் மாதம் மத்திய அரசையும், ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பிடமும் பெட்ரோல், டீசல்-ஐ ஜிஎஸ்டி அமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என அறிவித்தது. இதன் படி செப்டம்பர் 17ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் இதுகுறித்து முக்கியமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு

மோடி தலைமையிலான மத்திய அரசு பழைய மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றி ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வந்தது. இந்த மாற்றத்திற்குப் பின் பெட்ரோலியம் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால் பெட்ரோலியம் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி வசூலிக்காமல் தொடர்ந்து பழைய வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

எந்த நாள் முதல்

இந்த நிலையில் தான் கேரள உச்ச நீதிமன்றம் ஜூன் மாதம் எந்த நாள் முதல் பெட்ரோலியம் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரே வரி சாத்தியமில்லை

தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் அளித்துள்ள தகவல்கள் படி அனைத்துப் பெட்ரோலியம் பொருட்களுக்கும் ஓரே வரி விதிக்க முடியாது. கட்டாயம் வருவாய் அடிப்படையில் ஒவ்வொரு பெட்ரோலியம் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி மாறுபடும் எனக் கூறியுள்ளனர்.

மக்களுக்கு லாபம்..?!

எப்படியிருந்தாலும் பெட்ரோலியம் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி வசூலித்தால் மக்களுக்கு லாபம் தான். தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமாக வரியைச் செலுத்தி வரும் நிலையில் ஜிஎஸ்டி வரி வசூலித்தால் அதிகப்படியான 28 சதவீத வரி கூடுதலாக வசூலிக்கப்படும் செஸ் ஆகியவற்றைச் சேர்த்தாலும் 35 சதவீதம் தான் வரி இருக்கும்.

ரூ.5.5 லட்சம் கோடி வருமானம்

2019-20 நிதியாண்டில் அதாவது 2 வருடத்திற்கு முன்பு மத்திய மற்றும் மாநில அரசுக்குப் பெட்ரோலியம் பொருட்கள் விற்பனையில் கிடைத்த வரி வருமானத்தின் அளவு மட்டும் 5.5 லட்சம் கோடி ரூபாய், தற்போது இதன் அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்றால் மிகையில்லை.

பெட்ரோல், டீசல்

தற்போது டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.19 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், மத்திய அரசு 32 சதவீத கலால் வரியும், மாநில அரசு 23.07 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. இதுவே ஒரு டீசல் 88.62 ரூபாய் விலையில் 35 சதவீதம் மத்திய அரசின் கலால் வரியும், 14 சதவீதம் மாநில அரசின் வாட் வரி விதிக்கப்படுகிறது.

இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள்

தற்போது இருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு அதிகளவிலான வருவாய் ஈட்டக்கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பைச் செய்யாது. இதற்கு மாறாக இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் மீது முதற்கட்டமாக ஜிஎஸ்டி வரி விதிப்பைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.