வெள்ளை அறிக்கையை நிதித் துறை அமைச்சர் வெளியிட்டார்!
வெளியானது வெள்ளை அறிக்கை; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன்
சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு விட்டுச்சென்ற கடன்சுமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதில், தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக அரசு கடந்த 2011ல் பொறுப்பேற்றதில் இருந்து 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி அமைத்தது. அதிமுக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றாலும், தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்தது. தற்போது திமுக ஆட்சியை பொறுப்பேற்ற நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு விட்டு சென்ற கடன்சுமை குறித்த வெள்ளை அறிக்கை, பட்ஜெட் தாக்கலுக்கு முன் வெளியிடப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதன்படி, ஆக.,13ல் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், இன்று (ஆக.,09) 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை காலை 11:30க்கு நிதியமைச்சர் வெளியிட்டார். செய்தியாளர்களிடம் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு பலரும் உதவி செய்தனர். அறிக்கை தயார் செய்வதற்கு முன் ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையும், 2001ல் அதிமுக வெளியிட்ட அறிக்கையையும் ஆய்வு செய்தோம். இணையதளத்திலும் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. தேர்தல் அறிக்கையில் கூறியதை போல வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம். வெள்ளிக்கிழமை (ஆக.,13) வெளியிட உள்ள பட்ஜெட்டில் முழுமையான திட்டங்களை வெளியிடுவோம். அதன்பின் தான் திமுக.,வின் புதிய திட்டங்கள் குறித்து தெரியும்.
வருமானம் மிகவும் சரிந்துவிட்டதே முக்கிய பிரச்னையாக உள்ளது. 2006-11 கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழக அரசின் வருமானம் உபரியாக இருந்தது. 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருமான பற்றாக்குறை ஏற்பட்டது. 2016-21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையே ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்துவிட்டது. இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலமும் இல்லாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது. மேலும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசின் வருவாய் 4ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது.

அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது. கொரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் பெருமளவு சரிந்துவிட்டது. ஏற்கனவே தமிழகம் பொருளாதாரம் பலவீனமாக இருந்தநிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மோசமானது. 2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ.3 லட்சம் கோடியாக உள்ளது. தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை குறித்த கணக்கு சரியாக பராமரிக்கப்படவில்லை. அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின்போது நிதிப் பற்றாக்குறை ரூ.4.85 லட்சம் கோடி என கூறப்பட்டது. ஆனால், உண்மையில் தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல், தமிழக அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்தரவாதத்தில் 90 சதவீதம் மின்வாரியத்துக்கே அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் எச்சரிக்கை நிலையை காட்டுகின்றன. 2020-21ல் மட்டும் தமிழக அரசின் வருவாய் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 8.7 சதவீதம் ஆக சரிந்துவிட்டது.
தமிழக அரசின் வருவாய் படிப்படியாக குறைந்து வருகிறது. 2008-09 திமுக ஆட்சியின்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் வருவாய் 13.35 சதவீதமாக இருந்தது. 2011 வரை திமுக ஆட்சியில் 11.41 சதவீதமாக இருந்த வருவாய், அதிமுக ஆட்சியில் 3.8 சதவீதமாக சரிந்துள்ளது. உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பாதி அளவுக்கு கூட வரி வருவாய் இல்லை. 2006-11 திமுக ஆட்சியில் 7.98 சதவீதமாக இருந்த வரி வருவாய் அதிமுக ஆட்சியில் 6.15 சதவீதமாக சரிந்துவிட்டது. அதேபோல், வணிக வரி மூலம் கிடைக்கும் நிதி 4.49 சதவீதத்தில் இருந்து 4.19 சதவீதமாக குறைந்துவிட்டது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி 33 சதவீதம் குறைந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. வரி செலுத்த வேண்டியவர்களிடம் இருந்து வரியை வசூலிக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். பூஜ்ய வரி என்பது ஏமாற்று வேலை. அதனால் பயனடைவது பணக்காரர்கள் மட்டுமே, ஏழைகள் அல்ல. பெரு நிறுவனங்களுக்கான வரி, வருமானவரியை குறைத்து ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு அதிகரித்திருப்பது பாதகமான செயல். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி உள்ளது.
மத்திய அரசு செஸ் வரி என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை வெகுவாக குறைத்துவிட்டது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய வரிப்பங்கு 33 சதவீதம் குறைந்துவிட்டது. பெட்ரோல், டீசல் வரியில் மத்திய அரசுக்கே பெரும்பங்கு போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.32ல் வெறும் 50 பைசாவை மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிரித்து கொடுக்கிறது. மீதமுள்ள ரூ.31.50 மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மானியங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்ந்ததா என்பது குறித்து விவரங்கள் இல்லை.

அந்த ஆட்சியில் சொத்து வரி முறையாக வசூலிக்கப்படவும் இல்லை, உயர்த்தப்படவும் இல்லை. இதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியம், குடிநீர் வாரியத்துக்கு ரூ.1,743 கோடி பாக்கி வைத்துள்ளன. ஒரு யூனிட் மின்சாரம் வாங்கி விநியோகிப்பதில் மின்வாரியத்துக்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. அதேபோல், போக்குவரத்துத்துறை நிர்வாகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கி.மீ.,க்கும் அரசு பேருந்துகளை இயக்க ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது. மின்சார வாரியம், போக்குவரத்து துறையின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.87 கோடி வட்டி செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.