உலகில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து டிஜிட்டல் பேமெண்ட் உலகின் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், இந்தியா தனது டிஜிட்டல் பேமெண்ட் தளத்தின் அஸ்திவாரத்தைப் புதுப்பிக்கவும், மேம்படுத்தும் முயற்சியில் புதிய பேமெண்ட் சேவை தளமான e-RUPI அறிமுகம் செய்துள்ளது.
பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ள e-RUPI மூலம் அரசின் பல திட்டங்களுக்கான நிதியுதவி நேரடியாக மக்கள் பெற முடியும். விவசாயிகள், கர்ப்பிணி, மருந்து, மருத்துவச் சிகிச்சைக்கான அரசு சலுகை பணத்தை நேரடியாகவும், உடனடியாகவும் பெற முடியும்.
டிஜிட்டல் பேமெண்ட் சேவை தளத்தில் பாதுகாப்புத் தன்மை மிகவும் முக்கியம் என்பதால் தனியார் நிறுவனங்களையும், அமைப்புகளையும் நம்பாமல் மத்திய அரசு அமைப்புகளே இணைந்து உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் நம்பகத்தன்மைக்கு எவ்விதமான குறைவும் இல்லை. சரி e-RUPI என்றால் என்ன..? யார் உருவாக்கியது..? எப்படி இயங்கும்..? யாருக்கு இதனால் நன்மை..? என்பதைப் பார்ப்போம்.
e-RUPI என்பது பணமில்லா, டிஜிட்டல் பேமெண்ட் சேவை. இந்தச் சேவையைப் பயன்படுத்த கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், மொபைல் ஆப், இண்டர்நெட் பேங்கிங் என எந்த விதமான கூடுதல் கருவியும், செயலியும் தேவையில்லை. வெறும் மொபைல் போன் மற்றும் மொபைல் எண் இருந்தாலே போதும். எப்படி இயங்கும் எனக் குழப்பமாக இருக்கா..?
ஏற்கனவே e-RUPI பணமில்லா டிஜிட்டல் சேவை என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தப் பேமெண்ட் முறை எஸ்எம்எஸ் அல்லது QR கோட் உடன் இயங்கும். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பேமெண்ட் முறை gift-voucher முறையில் இயங்கும்.
e-RUPI டிஜிட்டல் பேமெண்ட் தளம் பணத்தைக் கொடுப்பவரும், பணத்தைப் பெறுபவர்களுக்கும் மத்தியில் இணைக்கும் ஒரு பாலமாக இயங்கும். மேலும் இந்தச் சேவையை எந்த ஒரு அரசு நிறுவனமும், தனியார் நிறுவனமும் பெற்று மக்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களும் பணத்தை gift-voucher அல்லது cash-voucher ஆக அனுப்ப முடியும்.
e-RUPI டிஜிட்டல் பேமெண்ட் தளத்தை மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பேமெண்ட் கார்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) தலைமையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு தான் தற்போது நாட்டையே கலக்கும் UPI தளத்தையும் UPI பேமெண்ட் முறையை உருவாக்கியது.
தேசிய பேமெண்ட் கார்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) உடன் மத்திய நிதியியல் சேவைத் துறை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய சுகாதார அமைப்பு இணைந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் பேமெண்ட் முறை மூலம் ஒரு தனிநபருக்கு ஒரு தனிப்பட்ட காரணத்திற்காகப் பணத்தை அனுப்ப முடியும். இது அரசு நலத் திட்டத்திற்கான பணப் பட்டுவாடாவில் பெரிய அளவில் உதவி செய்யும்.
இந்த e-RUPI டிஜிட்டல் பேமெண்ட் சேவையை அளிக்கத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இச்சேவையைப் பெற விரும்பும் அரசு அமைப்புகள், தனியார் மற்றும் அரசு நிறுவனம் தங்களுக்கு விருப்பமான வங்கியுடன் இணைத்து இச்சேவையைப் பெறலாம்.
இதன் மூலம் e-RUPI டிஜிட்டல் பேமெண்ட் சேவையின் எண்ட் யூசர் மக்கள் தான் என்பதால், சரியான நபருக்குப் பணத்தை அளிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
அதனால் மொபைல் நம்பர் அடிப்படையில், குறிப்பிட்ட வங்கியில் பணத்தைப் பெறவும், குறித்த நபருக்கு மட்டுமே பணத்தை அளிக்க வேண்டும் கடுமையான விதிமுறையோடு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
e-RUPI டிஜிட்டல் பேமெண்ட் சேவை மக்களுக்கு மத்தியில் இயங்குபவை அல்ல.. இது B2C மாடலில் ஒரு நிறுவனம் அல்லது அமைப்புக்கும் - அதன் வாடிக்கையாளர்கள் அல்லது மக்களுக்கு மத்தியில் இயங்கும் ஒரு பேமெண்ட் சேவை முறை.
அரசு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் e-RUPI டிஜிட்டல் பேமெண்ட் சேவை தளம் மூலம் மக்கள் நலத் திட்டங்களை எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் leak-proof முறையில் அளிக்க முடியும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் இது சாத்தியமில்லை என நினைக்கும் போது e-RUPI சாத்தியமாகியுள்ளது.
e-RUPI சேவை மூலம் குழந்தை நல திட்டத்தின் கீழ் குழந்தை மற்றும் தாய்க்கான மருந்து மற்றும் ஊட்டச்சத்து திட்டப் பலன், குழந்தை நல திட்டத்திற்கான பலன், காசநோய் ஒழிப்பு திட்ட பலன், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் மருந்து மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான பலன்கள், விவசாயிகளுக்கான உர மானியம், எனப் பல திட்டங்களுக்கு மக்களுக்கு நேரடியாகப் பணத்தைக் கொடுக்க முடியும்.
சீனா, பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா போல இந்தியாவும் டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும், central bank digital currency பிரிவை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது எனவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ரமி சங்கர் சில நாட்களுக்கு முன்பு கூறினார்.
இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி கனவை அடைய இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்கான இடைவெளியை e-RUPI சேவை பூர்த்தி செய்ய முடியும்.
இந்தியாவில் தான் முதல் முறையாக e-RUPI சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதா, என்றால் இல்லை. உலகில் பல நாடுகளில் இந்த சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா, கொலம்பியா, சிலி, ஸ்வீடன், ஹாங்காங் போன்ற பல நாடுகளில் இந்தச் சேவை பயன்பாட்டில் உள்ளது.
உதாரணமாக அமெரிக்காவில் education vouchers அல்லது school vouchers என்ற பெயரில் இதே e-RUPI சேவை இயங்குகிறது. education vouchers மூலம் ஒரு மாணவர்களுக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசுக் கல்விக்கான கட்டணத்தை ஸ்காலர்ஷிப் அல்லது கட்டண தள்ளுபடி தொகையை மாணவரின் பெற்றோருக்கு நேரடியாக அவர்களின் மொபைல் எண்ணுக்கு அளிக்கப்படுகிறது.