ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் வரும் 4-ம் தேதி வரை ஆடிக் கிருத்திகை திரு விழா ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தற்போது, ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு வாலாஜா வட்டம் ரத்தினகிரி பாலமுருகன் சுவாமி திருக்கோயில் மற்றும் ஆற்காடு வட்டம் திமிரி குமரக்கோட்டம் முருகன் கோயில் ஆகியவற்றில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பெருவாரியான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் பாதிப்பு சற்று தணிந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

இதன் காரணமாக, ராணிப் பேட்டை மாவட்டத்தில் ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மற்றும் திமிரி குமரக்கோட்டம் முருகன் கோயில், ஞானமலை, கோவிந்தச் சேரிகுப்பம், கரிக்கல் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு வரும் 4-ம் தேதி வரை என 5 நாட்களுக்கு பொதுமக்கள் சுவாமி தரிசனமும் தடை செய்யப்படுகிறது என உத்தர விட்டுள்ளார்.