தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆடி மாதம் என்பதால் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முதல் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உருவாவதால் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த நிலையில் நேற்று பரணி நட்சத்திரத்்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் நடந்தது. 

பரணி மற்றும் மறுநாள் வரும் கிருத்திகை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் காவடி சுமந்து சென்று கோவிலில் செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க சாமி தரிசனம் செய்யவும், காவடி எடுத்து வரவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. 
மேலும் பக்தர்களின் வருகையை தடுக்க கோவிலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.