ராணிப்பேட்டை மாவட்டம் அவளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவத்தன்று மாமண்டூரிலிருந்து களத்தூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தேக்குமர தோப்பில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இருப்பதை பார்த்த போலீசார் அருகே சென்றபோது அங்கிருந்த 6 பேர் தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் அந்தப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது தோப்பில் 452 போலிமது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த மதுபாட்டில்கள் மற்றும் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி மாமண்டூரை சேர்ந்த அன்பரசன் (36) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரது நண்பர்களான ஓச்சேரி பகுதியைச் சேர்ந்த விக்கி (27), புதுச்சேரியைச் சேர்ந்த கண்ணன் என்ற செந்தாமரைக்கண்ணன் (37) ஆகியோரை கைது செய்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் காவேரிப்பாக்கம் மகாலட்சுமி,பாணாவரம் லட்சுமிபதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தப்பியோடிய கவி என்ற கவியரசன் (46), ராமசந்திரன் (37), குமார் (50), பச்சையப்பன் (37), முரளி (45) ஆகியோரை அவளூர் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

போலி மதுபான ஆலை

புதுச்சேரியில் குமார், ராமச்சந்திரன், கவி என்ற கவியரசன் ஆகியோரிடமிருந்து சற்குணம் என்பவர் மூலமாக பாட்டிலின் மேல் ஒட்டக்கூடிய லேபிள்கள், மூடியின் மேல் ஒட்டும் ஹாலோகிராம் சீல் ஆகியவற்றை வாங்கி வந்து, செய்யாறில் உள்ள சற்குணத்தின் நண்பரான முரளி என்பவர் மூலம், பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் பாட்டில் மூடி சீல் வைக்கும் எந்திரம், காலி மது பாட்டில்கள், மூடிகள், மதுபானத்தில் கலக்கக்கூடிய எசன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு போலி மதுபானங்களை தயார் செய்து கொடுத்தாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 கேன் எரிசாராயம், 3,200 லேபில், ஸ்டிக்கர் அட்டை, 1,250 மூடிகள், மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் என்று கூறப்படுகிறது.

தலைமறைவாக இருக்கும் கடலூரை சேர்ந்த சற்குணம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.