சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு சாதாரண கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இரு மடங்காக ரூ.40 வசூலிக்கப்படுகிறது.


சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினமும் பாஸ்ட் லோக்கல் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த ரெயில் தினமும் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.

வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னைக்கு தினமும் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த ரெயில் பாஸ்ட் லோக்கல் ரெயிலாக இயக்கப் பட்டு வந்ததால் சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரெயில் சேவை கடந்த 2-ந்தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஸ்ட் லோக்கல் சேவைக்கு பதிலாக விரைவு ரெயிலாக இந்த ரெயில் மாற்றி இயக்கப்படுகிறது.

இதன்காரணமாக சென்னை-வேலூர் ரெயிலில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பயணிகள் கூறியதாவது:-

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு சாதாரண கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இரு மடங்காக ரூ.40 வசூலிக்கப்படுகிறது. இந்த ரெயிலில் சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர் செல்ல ஏற்கனவே கட்டணம் ரூ.10 ஆக இருந்தது. அது தற்போது ரூ.30 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண கட்டணத்தில் இயக்கி வந்த ரெயிலை விரைவு ரெயிலாக மாற்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரெயில்வே நிர்வாகம் இந்த ரெயிலை முன்பு போல சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.