தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்
வேலூர் மாநகரத்தில், 200 கோடி ரூபாய் டெண்டர் பணிகளை செய்துவரும் அ.தி.மு.க நிர்வாகியின் கட்டுமான நிறுவன அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்வது, ‘குமார் பில்டர்ஸ்’ நிறுவனம். இந்த நிறுவனம் வேலூர் மாநகரத்தில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை டெண்டர் எடுத்து செய்துவருகிறது. இதன் உரிமையாளர் ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க-வின் அம்மா பேரவைப் பொருளாளரான எஸ்.எம்.சுகுமார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய சுகுமார், தி.மு.க-வின் வெற்றிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியவர். ‘உள்ளடி’ அரசியலால் சுகுமார் தோல்வியடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்த தி.மு.க வேட்பாளர் ஆர்.காந்தியே மீண்டும் வெற்றிபெற்றார். காந்தி தற்போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக உள்ளார்.


ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சுகுமாரின் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டுவரும் ஒப்பந்தப் பணிகளை முடக்கும் வேலைகள் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. அதிகாரத்திலுள்ள முக்கியப் புள்ளிகள் சிலர் மூலம் இப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் சுகுமாருக்கு ஆதரவாகக் கொதிக்கிறது, வேலூர் அ.தி.மு.க. இந்நிலையில், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திலுள்ள ‘குமார் பில்டர்ஸ்’ அலுவலகம் அதிகாலையில் தீ வைத்து எரிக்கப்பட்டுப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், தற்செயலாக ஏற்பட்டதைப்போல் தெரியவில்லை என்கிறது நிறுவனத்தின் உரிமையாளரான சுகுமார் தரப்பு. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியிருக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் சிலர், ‘‘எஸ்.எம்.சுகுமார் மட்டுமின்றி, அ.தி.மு.க வேட்பாளர்கள், நிர்வாகிகள் பலருக்கும் ஆளும் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கிறார்கள். புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை முடிக்கவிடாமலும் பிரச்னை செய்கிறார்கள். செலவின பில்களுக்கான தொகையையும் பெறவிடாமல் தடுக்கிறார்கள். ராணிப்பேட்டையிலுள்ள சுகுமாருக்குச் சொந்தமான கல்குவாரிகளையும் செயல்படவிடாமல் தடுத்து முடக்கி வைத்துள்ளனர். இன்னொரு பக்கம் வேலூரிலுள்ள முக்கிய தலைவர் ஒருவரின் மகனும் அழுத்தம் கொடுக்கிறார். புதிய பேருந்து நிலையம் அருகிலேயே சுகுமாருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான இடம் ஒன்று இருக்கிறது. அந்த இடத்தை தனது பெயருக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று மிரட்டிவரும் லோக்கல் ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகரின் மகனால்தான் இந்த தீ விபத்தும் நடந்துள்ளது என்பது ஊரறியும்.

அவரின் மகனோ, ‘என்னை மீறி எதுவும் செய்துவிட முடியாது. பில்களையும் கிளைம் செய்ய விடமாட்டேன். தமிழகத்தில், உங்கள் நிறுவனம் வேறு எங்கேயும் எந்தப் பணிகளையும் ஒப்பந்தம் எடுக்க முடியாது’ என்றெல்லாம் மிரட்டியிருக்கிறார். சுகுமாரும் சில தினங்களாக ஊரில்லை. போன் மூலம் வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து, இப்போது செயலிலும் இறங்கி அச்சுறுத்துகிறார்கள்’’ என்றனர்.

போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘‘கடந்த பத்து நாட்களாக இந்த அலுவலகத்தைப் பூட்டிதான் வைத்திருக்கிறார்கள். இரண்டு ஏ.சி இருக்கிறது. மின்கசிவால்கூட தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம். கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் இங்கு வாட்ச் மேனாக உள்ளார். இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு லாரி ஒன்று உள்ளே இருந்து வெளியே சென்றுள்ளது. அதன் பின்னரே அசம்பாவிதம் நடந்திருக்கிறது. சி.சி.டி.வி கேமராக்களும் பொருத்தப்படவில்லை. தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டுவருகிறோம்’’ என்றனர்.

Source : Vikatan