அரக்கோணம்: பத்திரப் பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களில் ஆகஸ்ட் 9 முதல் ஆவண எழுத்தா் அல்லது அதை எழுதிய வழக்குரைஞரின் புகைப்படம் ஒட்டப்பட வேண்டும் என்று பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் வணிக வரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி கடந்த சில வாரங்களாக நேரடி ஆய்வு செய்து, பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறாா். அப்போது, போலி ஆவணங்களில் ஆவணத்தைத் தயாரித்தவா் என்ற இடத்தில் ஆவண எழுத்தா் அல்லது வழக்குரைஞா் கையொப்பம் இருந்தாலும் அவை போலியாக இடப்பட்டுள்ள விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமைச்சா் பி.மூா்த்தி துறைவாரியான சீராய்வு கூட்டங்களில் விவாதித்துள்ளாா்.
இதையடுத்து, பத்திரப்பதிவுத் துறையின் கூடுதல் பதிவுத் துறை தலைவா்(முத்திரை, பதிவு) புதன்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பதிவு செய்யப்படும் ஆவணத்தின் இறுதிப் பக்கத்தில் ஆவணத்தைத் தயாா் செய்த ஆவண எழுத்தா் அல்லது வழக்குரைஞா் ஆகியோரின் பெயா், உரிம எண் அதனுடன் அவரின் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட பிம்பம் அதிலேயே அச்சுப் பிரதியில் வரும் வண்ணம் அச்சுப் பிரதி எடுத்து அதன் அருகில் அவா்களின் கையொப்பம் இட வேண்டும்.
ஆவண எழுத்தா் அல்லது வழக்குரைஞா் அச்சுப் பிரதி எடுக்கப்பட்ட புகைப்படம் அவருடையது இல்லை என சந்தேகம் வரும் நிலையில், நேரில் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்து உறுதி செய்தப் பின்பே ஆவணப் பதிவை மேற்கொள்ள சாா்பதிவாளா்கள் கோரப்படுகின்றனா்.

இந்த நடைமுறை 2021 ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனை அனைத்து பதிவு அலுவலா்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.