அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்...!!

அமைவிடம் :

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் திருக்கோவில். திருவையாறை தலைமையாகக் கொண்ட சப்தஸ்தான தலங்களில் இது 4-வது திருத்தலமாக விளங்குகிறது. வேதியன் எனப்படும் பிரம்மன், சிவபூஜை செய்த தலம் என்பதால் 'வேதிக்குடி" என்று இத்தலத்தை சொல்லப்படுகிறது.

மாவட்டம் :

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிக்குடி, கண்டியூர் அஞ்சல், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருக்கண்டியூர் வந்து அங்கிருந்து வீரசிங்கன்பேட்டை வழியாக தென்கிழக்கே சிறிது தொலைவில் திருவேதிக்குடி சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. கண்டியூரில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.

கோயில் சிறப்பு :

ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது. சூரியன் ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். இதனை காண மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் பெருமளவு இங்கு வருவார்கள். 

சிவன் சன்னதிக்குப் பின்புள்ள (கோஷ்டம்) அர்த்தநாரீஸ்வரர் விசேஷமானவர். பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவனின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் இங்கு வித்தியாசமாக உள்ளது.

இத்தலத்துப் பிள்ளையார் வேதம் கேட்க சாய்ந்திருக்கும் நிலையில் காணப்படுகிறார். எனவே இவருக்கு 'வேதபிள்ளையார்" என்றும், 'செவிசாய்ந்த விநாயகர்" என்றும் பெயர்.

இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது.

சம்பந்தர் கோயில் இறைவனைப் பற்றி பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு.

கோயில் திருவிழா :

சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழாவும் இங்கு சிறப்பு பெற்றது. ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்றவை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

வேண்டுதல் :

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை, மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

பிரம்மன் பூஜித்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் கல்வி ஞானங்களில் சிறந்து விளங்கலாம்.

நேர்த்திக்கடன் :

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.