அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்...!!

அமைவிடம் :

விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் ஊரில் உள்ள கோவில் தான் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இந்த கோவிலில் மூலவராக லட்சுமி நரசிம்மரும், அம்மனாக கனகவல்லியும் உள்ளனர். 

மாவட்டம் :

அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில், பரிக்கல், உளுந்தூர்பேட்டை தாலுகா, விழுப்புரம் மாவட்டம்.

எப்படி செல்வது?

விழுப்புரத்தில் இருந்து கூவாகம் செல்லும் வழியிலேயே அமைந்துள்ளது ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் ஆலயம். உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி பரிக்கல்லுக்கு இருக்கிறது. 

கோயில் சிறப்பு :

பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி மூர்த்தி உண்டு. மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.

இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.

பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இவருக்கு முன்னால் நெல்லை கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர். இதனால் தங்கள் கோரிக்கைகள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை. 

வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரு சேர உள்ளது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும். 

பிரகாரத்தில் வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே விநாயகர், கோயில் எதிரே கருடன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

இவ்வாலயத்தில் ஆஞ்சநேய மூர்த்திக்கு தனிச்சிறப்பு என்பதால் கருவறையில் பக்த ஆஞ்சநேயர் எழுந்தருளி இருக்கிறார். அவர் மூலமாகவே ஸ்ரீலட்சுமிநரசிம்மர் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஐதீகம்.

கோயில் திருவிழா :

வைகுண்ட ஏகாதசி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை :

பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு. கை கால் ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், வழக்கு வம்புகளில் சிக்கி இருப்பவர்கள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவார்கள்.

நேர்த்திக்கடன் : 

எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் இவற்றோடு கூடிய நித்ய அபிஷேகங்கள் செய்யலாம். நரசிம்மருக்கு வஸ்திரம் சாற்றலாம். பக்தர்களின் நேர்த்திக்கடன்களாக மொட்டை போடுதல், காதுகுத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சணம் ஆகியவை பெருமாளுக்கு இத்தலத்தில் செய்யப்படுகின்றன. இதுதவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.