அரக்கோணம் அருகே மாடு மேய்க்கச்சென்ற மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். நகைகளுக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்பரிஷி புரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் (78). இவரது மனைவி சரோஜா(72). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராமன் உயிரிழந்து விட்டதால் மகன் கோவர்த்தனுடன் சரோஜா வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு அருகேயுள்ள நிலத்தில் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக சரோஜா ஓட்டிச் சென்றார். வழக்கமாக பிற்பகல் 2 மணிக்கு வீடு திரும்பும் சரோஜா 3 மணியாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது மகன் கோவர்த்தனன் தாயாரை தேடி நிலத்துக்கு சென்றார்.

அங்கு மாடுகள் மட்டும் தனியாக மேய்ந்துக்கொண்டிருக்க, அருகே சரோஜா கீழே விழுந்து கிடந்தார். இதைக்கண்டதும், கோவர்த்தன் ஓடிச்சென்று தாயை எழுப்ப முயன்றபோது அவரது முகம், தாடை, காது பகுதிகளில் காயம் இருந்ததும், அவர் உயிரிழந்து கிடப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் முரளிதரன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை கைப்பற்றினர்.

மாடு மேய்ச்சலுக்கு சென்ற சரோஜா தங்கத்தில் மூக்குத்தியும், கம்மலும் அணிந்திருந்ததாகவும், கழுத்தில் கவரிங் சங்கிலியும், கை வளையலும் அணிந்திருந்தும், அவர் உயிரிழந்த இடத்தில் அவர் அணிந்திருந்த தங்கம் மற்றும் கவரிங் நகைகள் மாயமாகியிருந்ததால் மூதாட்டி நகைகளுக்காக கொலை செய்யப் பட்டிருக்கலாம் என சந்தேகத்துடன் காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.