‘ஸ்மைல்’ திட்டத்தின் கீழ் கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), கிளாஸ்டன் புஷ்பராஜ் (ராணிப்பேட்டை) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா பாதிப்பால் பி.சி., எம்.பி.சி., மற்றும் சீர் மரபினர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் செய்யும் வகையில் ‘ஸ்மைல்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக கடன் திட்டத் தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும்.

‘ஸ்மைல்’ திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கரோனா தொற்றால் 
உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளனர்.