கலவை அருகே அறுவடைக்கு தயாரான 300 ஏக்கர் நெற்பயிர் மழையால் சேதமடைந்தது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகாவை சுற்றி 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தாலுகாவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் நெல் பயிர்கள், நிலக்கடலை, தானியங்கள், காய்கறிகள் என விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சொரையூர், மாம்பாக்கம், தோனிமேடு, பொன்னமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் கதிர் வந்து முற்றி அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதில் விளைநிலங்களில் மழை வெள்ளம் தேங்கியதால் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் மண்ணோடு சாய்ந்து சேதமானது. இதனால், அப்பகுதி விவசாயிகள் செய்வதறியாமல் வேதனையில் உள்ளனர். அறுவடை நேரத்தில் பயிர்கள் சாய்ந்து, நெற்கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து விட்டன. இதனால், விவசாயிகளுக்கு மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ₹30 ஆயிரம் வரை கடன் வாங்கி பயிர் செய்துள்ளனர். தற்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.