69 கிலோ வெல்டர்வெயிட் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை சென்-நீன் சென்னை அவர் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக்கிற்குச் சென்ற முதல் இந்திய மகளிர் குத்துச்சண்டை வீரர் அவர்.
லவ்லீனா தோற்கடித்த சென், முன்னாள் உலக சாம்பியனாவார். லவ்லீனா இதுவரை பல போட்டிகளில் அவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

2018ஆம் ஆண்டில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் லவ்லீனா அவரிடம் தோற்றுப்போனார். இந்தத் தோல்விகளில் இருந்து அவர் இப்போது மீண்டு வந்து வெற்றி பெற்றிருக்கிறார்.

மைக் டைசன், முகமது அலி பாணியை விரும்புவர்

மைக் டைசனின் பாணியை விரும்பும் லவ்லீனாவுக்கு முகமது அலியையும் பிடிக்கும். ஆனால் இது தவிர அவர் தனது சொந்த அடையாளத்தையும் உருவாக்க வேண்டியிருந்தது.

இந்தியாவின் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வரும் பல வீரர்களைப் போலவே, 23 வயதான லவ்லீனாவும், பல நிதி நெருக்கடிகளை தாண்டி ஒலிம்பிக்கிற்கு முன்னேறியுள்ளார்.

அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாரோ முகியா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் அவர். தந்தை ஒரு சிறு வியாபாரி. தாய் ஒரு இல்லத்தரசி. தந்தையின் மாத வருமானம் மிகவும் குறைவாகவே இருந்தது.


லவ்லீனாவுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூறுவதை புறக்கணித்த இந்த இரட்டை சகோதரிகள் கிக் பாக்ஸிங்கைத் தொடங்கினர். பின்னர் லவ்லீனாவும் கிக் பாக்ஸிங்கில் ஈடுபட்டார்.

கிக் பாக்ஸிங்கில் இரட்டை சகோதரிகள் தேசிய சாம்பியனானார்கள். ஆனால் லவ்லீனா தனக்கென ஒரு வித்தியாசமான யோசனையைக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் செய்தித்தாளில் கட்டப்பட்ட இனிப்புகளை அவரது தந்தை கொண்டுவந்தபோது, அதில் முகமது அலியின் புகைப்படத்தை லவ்லீனா பார்த்தார் .தந்தை முகமது அலியின் கதையை மகளுக்கு விவரித்தார். அப்போதிலிருந்து லவ்லீனாவின் குத்துச்சண்டை பயணம் தொடங்கியது.

தொடக்கப்பள்ளியில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேர்வுப்போட்டிகள் நடைபெற்றபோது, பயிற்சியாளர் பதும் போரோவின் 'திறமையை கண்டறியும் பார்வை' லவ்லீனாவின் மீது பட்டது. லவ்லீனாவின் குத்துச்சண்டை பயணம் 2012 ல் தொடங்கியது.

ஐந்து ஆண்டுகளில் அவர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கத்தை வென்றார்.

இந்தியாவில் வேறு வகையான ஒரு பிரச்னையை லவ்லீனா எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவரது பிரிவில் மிகக் குறைவான பெண் வீரர்களே உள்ளனர். எனவே அவர் பயிற்சி செய்ய 'சண்டையிடும் கூட்டாளர்கள்' கிடைப்பது கஷ்டமாக இருந்தது. பலமுறை 69 கிலோ பிரிவில் இல்லாதவர்களுடன் பயிற்சி செய்யவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
ஒலிம்பிக்கிற்கு முந்தைய சில மாதங்கள் அவருக்கு எளிதானதாக இருக்கவில்லை. மற்ற வீரர்கள் பயிற்சியில் மும்முரமாக இருந்தபோது, லவ்லீனாவின் தாயாருக்கு சிறுநீரக மாற்று அறுவை செய்யவேண்டியிருந்தது. எனவே அவர் குத்துச்சண்டையில் இருந்து விலகி தனது தாயுடன் நேரம் செலவிட வேண்டியிருந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான், லவ்லீனா மீண்டும் பயிற்சிக்குச் சென்றார்.

இதன் பின்னர், கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அவர் தனது அறையிலே நீண்ட காலம் பயிற்சி பெற வேண்டியிருந்தது. ஏனெனில் பயிற்சி ஊழியர்களில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் அவர் வீடியோ மூலம் தொடர்ந்து பயிற்சி பெற்றார்.

அவரது பாதையில் பல்வேறு வகையான சிரமங்கள் இருந்தன. ஆனால் லவ்லீனா அவற்றை ஒவ்வொன்றாகக் கடந்துவிட்டார்.

2018ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது லவ்லீனாவின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. இது குறித்து ஒரு சர்ச்சையும் அப்போது இருந்தது.

காமன்வெல்துக்கு தெரிவு செய்யப்பட்ட விவரம் லவ்லீனாவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்றும் அவர் செய்தித்தாள்களிலிருந்து தெரிந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

அவரால் காமன்வெல்த் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. ஆனால் இங்கிருந்து அவர் தனது விளையாட்டின் நுட்பம் பற்றி மட்டுமல்லாமல், மன மற்றும் உளவியல் மீதும் கவனம் செலுத்தத்தொடங்கினார்.

இதன் விளைவை பார்க்க முடிந்தது. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் தொடர்ந்து இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்றார்.

டோக்யோ ஒலிம்பிக்கில் சில நாட்களுக்கு முன்பு, மணிப்பூரின் மீராபாய் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெர்றுத்தந்தார். இப்போது வடகிழக்கின் மற்றொரு வீராங்கனையான லவ்லீனா பதக்கம் பெற்றும் வாய்ப்பிற்கு அருகில் உள்ளார்.

அசாமில் லவ்லீனா பற்றிய பெரும்உற்சாகம் நிலவுகிறது. அசாம் முதல்வரும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களும் இணைந்து லவ்லீனாவுக்கு ஆதரவாக சில நாட்களுக்கு முன்பு ஒரு சைக்கிள் பேரணி நடத்தினர்.

குறைந்தது இரண்டு முறையாவது ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும், அதன்பின்னர் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஆகும் விருப்பம் உள்ளது என்று இந்திய விளையாட்டு ஆணையத்தின் வீடியோவில் லவ்லீனா தெரிவித்திருந்தார். அதாவது, குறைந்தது ஒரு ஒலிம்பிக் பயணமும் பதக்கக் கனவும் அவரிடம் மீதமிருந்தது

ஒலிம்பிக்கில், காலிறுதிக்கு முந்தைய போட்டியில் அவர் ஒரு 'பை ' பெற்றார். பின்னர் அவர் ஜெர்மன் வீராங்கனை நதின் அப்டிஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

இப்போது தன்னால் தோற்கடிக்க முடியாமல் இருந்த சீன தைபே வீராங்கனையைத் தோற்கடித்து பதக்கக் கனவை நிறைவேற்றியிருக்கிறார். அவரது அடுத்த இலக்கு தங்கம்தான்.