அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்...!!
அமைவிடம் :

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 186 வது தேவாரத்தலம் ஆகும்.

மாவட்டம் :

அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம், திருவாரூர் மாவட்டம்

எப்படி செல்வது?

திருவாரூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் கச்சனம் கிராமம் இருக்கிறது. சாலையோரம் கோயில் உள்ளது. 

கோயில் சிறப்பு :

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

சிவாலயங்களில் பெருமாள் சன்னதியும் இணைந்திருப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். இங்கு சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார். 

கோயிலின் கோஷ்டத்தில் துர்க்கை, சரஸ்வதி, ஜேஷ்டாதேவி ஆகியோர் உள்ளனர். இவர்களை அடுத்து தனி சன்னதியில் மகாலட்சுமி உள்ளார்.


கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூட தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருவது சிறப்பாக உள்ளது. (பின்புறத்தில் நந்தி உள்ளது தெரிகிறது) 

நடனச்சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வர வடிவமும் அழகாக உள்ளன.

இத்தலத்தில் அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட, 'அகத்திய தீர்த்தமும்" இந்தக் கோவிலின் மதிலுக்கு வடபுறம் உள்ள 'வச்சிர தீர்த்தமும்" உள்ளது. இந்த தீர்த்தங்களில் நீராடி இறைவனையும், அம்பாளையும் வழிபட பாவங்கள் நீங்கும்.

இந்திரனின் கைவிரல்கள் லிங்கத்தில் பதிந்ததால், 'கைச்சின்னேஸ்வரர்" எனப்படும் இவர், பல்வளை நாயகி அம்பிகையுடன் இத்தலத்தில் உள்ளார். எனவே, இத்தலம் கைச்சி(ன்)னம் என்று பெயர் பெற்றுள்ளது.

கோயில் திருவிழா :

வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், கார்த்திகை ஞாயிறு நான்கள், மார்கழித் திருவாதிரை, மாசிமகம், பங்குனி உத்திரம் முதலிய விசேஷ காலங்களிலும், பிரதோஷ காலங்களிலும் சுவாமி புறப்பாடு நடை பெறுகின்றது. கந்தசஷ்டிவிழா சிறப்பாக நடத்தப்பெறுகிறது. 

பிரார்த்தனை :

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவி செய்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.