அருள்மிகு ஐயப்பன்(அம்பாடத்து மாளிகா) திருக்கோயில்...!!
அமைவிடம் :
கோயில் என்றாலே கடவுள் சிலைகள் நிறைந்ததாக, பக்தர்களின் தரிசனத்திற்காக தினமும் திறக்கப்பட்டு மூடப்படுவதுமாக இருக்கும். ஆனால் அம்பாடத்து மாளிகா எனும் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் சிலையே இல்லாமல் உள்ளது தனிச்சிறப்பு வாய்ந்த கோயிலாக பார்க்கப்படுகின்றது.
மாவட்டம் :
அருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா, மஞ்ஜப்புரா காலடி, எர்ணாகுளம் மாவட்டம், கேரளா மாநிலம்.
எப்படி செல்வது?
எர்ணாகுளத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள காலடி சென்று அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் மஞ்ஜப்புரா அம்பாடத்து மாளிகா கோயில் உள்ளது.
கோயில் சிறப்பு :
அம்பாடத்து மாளிகா ஐயப்பன் கோயிலில் எந்த சிலையும் இல்லாமல், வெள்ளி தடி, கல், விபூதி பை ஆகியவற்றை மூலவராக இருப்பது மிகச் சிறப்பானது.
பங்குனி உத்திரத்தில் சிவ, விஷ்ணு புதல்வரான ஐயப்பன் அவதரித்தார் என்பதால், பங்குனி உத்திரம் தினத்தில் கோயில் நடை திறந்திருக்கும்.
இக்கோயிலில் பெண்களுக்கும் அனுமதி உண்டு.
அம்பாடத்து மாளிகா குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை என்பவரிடம் ஓர் அந்தணர் ஒரு வெள்ளிமுத்திரையுடன் கூடிய தடி, விபூதி பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றை கொடுத்து விட்டு, 'இதோ வருகிறேன்" என கூறி சென்றார்.
ஆனால், திரும்பி வரவில்லை. கேசவன் பிள்ளை ஐயப்பனை தரிசித்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது, அந்த அந்தணர் அவரை சந்தித்து, 'நான் கொடுத்த மூன்று பொருட்களையும் பூஜித்து வாருங்கள்" எனக் கூறிவிட்டு மாயமாகி விட்டார்.
அந்தணராக வந்தது ஐயப்பனே என கருதி அன்று முதல் அம்பாடத்து மாளிகா குடும்பத்தினர் கோயில் ஒன்றை கட்டி, மூலஸ்தானத்தில் இந்த மூன்று பொருட்களையும் வைத்து, அவற்றை ஐயப்பனாக கருதி பூஜித்து வருகின்றனர்.
கோயில் திருவிழா :
சபரிமலையில் நடக்கும் அனைத்து விழாக்களும் இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
பிரார்த்தனை :
இந்த கோயிலில் வேண்டினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப பிரச்சனை தீரும். தீராத நோய் தீரும்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறினால் பக்தர்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக கொண்டு சென்று செலுத்துகின்றனர்.