ராணிப்பேட்டை
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுைர வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு நிறுவனங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, திமிரி, அரக்கோணம், சோளிங்கர் மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய வட்டாரங்களில் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 4 நகர கூட்டுறவு வங்கிகள், 9 நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 2 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், 8 கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் 16 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கூட்டுறவு நிறுவனங்களில், பயிர் கடன், விவசாய நகை கடன், பொது நகை கடன், கறவை மாட்டுக் கடன், சுய உதவி குழுக்கள் கடன், தனிநபர் கடன், சிறு வணிக கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், தானிய ஈட்டுக் கடன், பண்ணை சாரா கடன், வீட்டுக் கடன், வீட்டு அடமான கடன், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள கடன், தொழில் முனைவோர் கடன், தாட்கோ கடன், கல்விக் கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

கடன் பெறலாம்

தற்போது கொரோனா நோய்தொற்று காலத்தில் வேலை இழந்து தவிக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கும், நலிவடைந்துள்ள கைவினை கலைஞர்களுக்கும், சாலையோர மற்றும் நடைபாதை சிறு குறு வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

உரிய காலத்தில் கடன்களை திருப்பி செலுத்தும்  கடன்காரர்களுக்கு வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதர கடன்கள் 7 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை வட்டியுடன் கடன் அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே தற்போது நோய்த்தொற்று நெருக்கடியால் கந்து வட்டியில் சிக்கி தவிக்காமல் மேற்கண்ட கடன்களுக்காக தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தேவையான கடன் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.