அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐடி நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் பல ஆயிரம் பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

கொரோனாவின் வருகைக்கு பிறகு பல ஐடி நிறுவனங்களும் தொடர்ந்து ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றன.

அந்த வகையில் தற்போது காக்னிசன்ட் நிறுவனம் நடப்பு ஆண்டில் 1 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


இந்தியாவில் பணியமர்த்தல்
ஐடி துறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், பணிமர்த்தலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் காக்னிசன்ட் நிறுவனமும் நடப்பு ஆண்டில் சுமார் 1 லட்சம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் நடப்பு ஆண்டில் 30,000 பிரெஷ்ஷர்களையும், 2022ம் ஆண்டில் 45,000 பிரெஷ்ஷர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

ஜூன் காலாண்டில் Attrition விகிதம் அதிகரித்துள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,01,200 ஆக உள்ளது. ஜூன் காலாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தில் இருந்து 23,300 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஜூன் காலாண்டில் ஒவ்வொரு வேலை நாளிலும் சுமார் 350 - 380 ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

வலுவான வருவாய் வளர்ச்சி
இது குறித்து காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் ஹம்ப்ரிஸ், ஜூன் காலாண்டில் நிகர வருமானம் 41.8% அதிகரித்து, 512 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்ட்லும் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தேவைக்கு அதிகரிப்புக்கு மத்தியில், Attrition விகிதமும் குறைந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் அதிகளவில் பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் எனலாம்

இதே இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்கள், நடப்பு ஆண்டில் 1.20 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தன. மொத்தத்தில் நடப்பு ஆண்டில் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் எனலாம்.