அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்...!!

அமைவிடம் :

பஞ்சவடி, புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இந்த இடம் அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயிலுக்கு புகழ் பெற்றது. இக்கோயிலிலுள்ள மூலவர், ஆஞ்சநேயர், நரசிம்மர், வராஹர், ஹயகிர்வர், கருடர் ஆகிய ஐந்து முகங்களை கொண்டுள்ளார்.

மாவட்டம் :

அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், பஞ்சவடி, விழுப்புரம் மாவட்டம். 

எப்படி செல்வது?

விழுப்புரம் மாவட்டம், பஞ்சவடியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு மைலம், திருபுவணி, திண்டிவனம் என மூன்று சாலை வழியாக பயணம் செய்யலாம். விழுப்புரம் மாநகரத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

கோயில் சிறப்பு :

ஆஞ்சநேயர் என்றாலே மாபெரும் சக்தி படைத்தவர் என்பதற்கேற்ப, இந்த கோயிலில் ஆஞ்சநேயர் ஐந்து தலைகளுடன் 36 அடி உயர சிலையாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். 

ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள். 

ஆஞ்சநேயர் சிவனின் அம்சம் என்பதற்கேற்ப இக்கோயிலில் லட்டு லிங்கம் செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. 

ராம பாத தரிசனம் என்பது விசேஷமானது. இக்கோயிலில் ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 100 ஆண்டு பழமையான சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் போடப்பட்டுள்ளது.

ராமர், சீதை, இலட்சுமணன், சத்துருக்கனன், பரதன் ஆகியோர் சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

மூலவரான ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயரத்தில் விமானமும், அதன் மீது 5 அடி உயரம் கொண்ட கலசமும் உள்ளது. சுமார் 36 அடி உயரம் கொண்ட இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயர்தூக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இத்திருவுருவத்திற்கு அபிஷேகம் செய்வதென்றால் 1008 லிட்டர் பால் தேவைப்படும். 

இங்கு பொருத்தப்பட்டுள்ள 1200 கிலோ எடையுள்ள மாபெரும் மணியை ஒலித்தால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை இதன் ஒலிக் கேட்கும். 

திருவிழா :

ஸ்ரீராம நவமி, அனுமன் ஜெயந்தி ஆகிய விழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை :

பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டால் மனதில் உள்ள தேவையற்ற சங்கடங்கள் விலகி, தொழில் இலாபப் பாதையில் செல்லும். மேலும், இல்லறத்தில் நீடித்து வந்த பிரச்சனைகள் தீரும். நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் மேன்மை ஏற்படும். 

நேர்த்திக்கடன் :

வேண்டிய யாவும் நிறைவேறியபின் ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாற்றி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாற்றி, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சிறப்பு அலங்கார, அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.