அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்...!!

அமைவிடம் :

திருநெல்வேலி மாநகர் பாளையங்கோட்டை பெருமாள் மேலரத வீதியில் எளிமையான தோற்றத்துடன் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோயில்.

மாவட்டம் :

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.

எப்படி செல்வது?

திருநெல்வேலிக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் சிறப்பு :

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரத்தை போலவே ராகு தோஷ நிவர்த்தி தலம் ஒன்று, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ளது. 

இங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் திருநாகேஸ்வரத்தில் உள்ளது போல் நாகவள்ளி, நாக கன்னி தேவி சமேதராக காட்சியளிக்கிறார் ராகு பகவான். 

திருநாகேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சக்திவாய்ந்த ராகு யந்திரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால வேளையில் ராகு தோஷம் நிவர்த்தியாவதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும் பாலை, நோய் நிவாரணம் வேண்டியும், மகப்பேறு கிட்டவும் அருந்துகின்றனர். ராகு பகவானுக்கு செய்யப்படும் பால் முதலிய எல்லா அபிஷேகங்களையும் எந்தவித வேறுபாடுமின்றி பக்தர்கள் வரிசையில் நின்று தாங்களாகவே செய்வது சிறப்பு வாய்ந்த ஒன்று.


அர்ச்சனை மற்றும் கற்பூர ஆராதனையையும் பக்தர்களே செய்கின்றனர். அவரவர் கொண்டு வந்த பிரசாதத்தை அவரவரே ராகு பகவானுக்குப் படைத்து பின் தங்கள் கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். 

ராகு பகவானுக்கு உரிய அதிதேவதையான துர்க்கையின் அம்சமாக கருமாரி அம்மன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், தோஷங்கள் யாவும் இருமடங்கு விரைவாக நிவர்த்தியாகும் என்கின்றனர்.

திருக்கோயிலில் உள்ள பகவதி அம்மன், கருமாரி அம்மன், ராகு பகவான், சுடலைமாடசாமி ஆகியோர் சிரசுகளில் சிவப்பு கயிறு வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கயிறு ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி தோறும் மாற்றப்படுகிறது. 

நாற்பத்தெட்டு நாட்கள் அம்மன் சிரசில் வைக்கப்பட்ட பின், காவல் தெய்வமான சுடலைமாடசாமி சிரசில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்கின்றனர். இக்கயிறு, துர்தேவதைகளால் பயம், விபத்து, நோய்நொடிகள் ஏற்படாமல் ரட்சையாகக் காக்கும் என்று நம்புகின்றனர்.

கோயில் திருவிழா :

அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் வெகு சிறப்பாக செய்யப்படுகின்றன. 

பிரார்த்தனை :

துர் தேவதைகளால் பயம், விபத்து, நோய் நொடிகள் வராமல் தடுக்கவும், ராகுவால் ஏற்படும் தோஷம் நீங்கி நன்மை பெறவும் பக்தர்கள் இங்குள்ள அம்மனை பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன் :

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு பொங்கல் நைவேத்தியம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.