இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த வேளையிலும் இந்தியச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்கவும், முதலீடு செய்யவும் அதிகளவில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

அந்த வகையில் 2020-21 நிதியாண்டில் மட்டும் சுமார் 78 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க விண்ணப்பித்துப் பதிவு செய்துள்ளதாகக் கார்பரேட் விவகாரத் துறை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த 78 நிறுவனங்களில் மகாராஷ்டிராவில் 23 நிறுவனங்களும், டெல்லியில் 15 நிறுவனங்களும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தலா 9 நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் அதிக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் 2018-19 முதல் 2020-21 வரையிலான 3 நிதியாண்டுகளில் சுமார் 320 வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதற்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 2018-19 நிதியாண்டில் 118 நிறுவனங்கள், 2019-20 நிதியாண்டில் 124 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதோடு 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவில் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ள 78 நிறுவனங்கள் மூலம் சுமார் 7,02,46,600 ரூபாய் பதிவு கட்டணமாக வசூலித்துள்ளது மத்திய அரசு.