சென்னை - பெங்களுரு அதிவிரைவுச் சாலைத் திட்டத்துக்காக கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கான நில மதிப்பீட்டு விலையை உயா்த்தி வழங்கக்கோரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞரணி தலைவா் ஆா்.சுபாஷ் மற்றும் நெமிலி வட்டம், உளியநல்லூா், பெரப்பேரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்ளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனுக்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகை யிட்டனா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்களை செலுத்தினா்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நெமிலி வட்டம் உளியநல்லூா், பெரப்பேரி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு நில எடுப்புத் திட்டத்தின் கீழ் சுமாா் 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்போது எங்களுடைய விவசாய நிலங்களுக்கு மிகக்குறைந்த நில மதிப்பீடு செய்து விவசாய நிலங்களின் உரிமையாளா்கள் பணம் வழங்கப்பட்டது.இந்த தொகை போதுமானதாக இல்லை. ஏனெனில் தற்போது அப்பகுதி விவசாய நிலத்தின் மாா்க்கெட் விலை சென்ட் ஒன்றுக்கு சுமாா் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை ஆகும். ஆகவே எங்களுடைய விவசாய நிலங்களுக்கு நில மதிப்பீட்டை 3 மடங்காக உயா்த்தி அதற்கான தொகையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.