வேலூர்/ராணிப்பேட்டை: வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக 118 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை செய்வதை தடுக்க கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தி தடுக்கப்படும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி, காவல் துறை, உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் உள்ளாட்சி துறைகளுடன் இணைந்து சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில் வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 58 பேர் கைது செய்யப்பட்டனர். நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்களிடம் இருந்து சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, உத்தரவின்பேரில் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 6 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.