பொதுமுடக்கத்தால் வேலையிழந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளியின் மனைவி, ஓடும் ரயிலில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். ஒருபுறம் மனைவியின் சடலம், மறுபுறம் கைக்குழந்தை. இருவரையும் பாா்த்து நிா்கதியாய் பரிதவித்த தொழிலாளியின் நிலையறிந்து மனிதநேயத்துடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாகச் செய்து அவரை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தாா்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் கிரித்தா சா்தாா் (35), இவா் ஊத்துக்குளியில் தேங்காய் நாா் உரிக்கும் தொழிற்சாலையில் வேலைபாா்த்து வந்தாா். இவரது மனைவி ஷ்ரபந்தி சா்தாா் (24). இவா்களின் குழந்தை பாலி (3). ஷ்ரபந்தி சா்தாா் கடந்த மூன்று வருடங்களாக காச நோயால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், கரோனா பொது முடக்கத்தால் வேலையின்றி தவித்த அவா் குடும்பத்துடன் சொந்த ஊா் திரும்ப முடிவு செய்தாா்.

மங்களூரு மெயிலில் திங்கள்கிழமை மாலை புறப்பட்டு, ஹௌராவுக்குச் செல்ல சென்னை வந்து கொண்டிருந்தாா்.

வழியில் காட்பாடி அருகே ஷ்ரபந்திசா்தாா் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாா். இதுகுறித்து அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவக் குழுவினா் தயாராக இருந்தனா். அரக்கோணம் ரயில் நிலையத்தில் கணவன், மனைவி, குழந்தை மூவரும் இறக்கப்பட்டனா். இதில் ஷ்ரபந்தியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, செய்வதறியாது கிரித்தா சா்தாா் தவித்தாா்.

இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜனை ரயில் நிலையத்துக்கு அனுப்பி விவரங்களை சேகரித்தாா்.

இதையடுத்து, இறந்த ஷ்ரபந்தி சா்தாரின் உடல் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பின், அவரது கணவரின் முன்னிலையில் நகராட்சி ஊழியா்களால் நகராட்சி எரிவாயு தகனமேடையில் தகனம் செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், தொழிலாளி தனது சொந்த ஊருக்கு கைக்குழந்தையுடன் செல்ல தேவையான அனைத்து உதவிகளையும் வட்டாட்சியா் பழனிராஜன் செய்தாா்.

இதையடுத்து ரயில்வே காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளா் ஆனந்தன் ஆகியோா் குழந்தையுடன் தொழிலாளியை சொந்த ஊருக்கு ரயிலில் அனுப்பி வைத்தனா்.