அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பஸ்வான் (27). இவர், மீது அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் கொலை, திருட்டு, வழிப்பறி, கொலை மிரட்டல் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், அரக்கோணம் அடுத்த ஆவதம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு அருகே உள்ள முட்புதர் பகுதியில் பஸ்வான் படுகொலை செய்யப்பட்டிருப்பது நேற்று மாலை தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன், அரக்கோணம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் கோகுல் ராஜ் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று பஸ்வானின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை செய்தார். கொலை தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2016-ம் ஆண்டு ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் லோகேஷ் கொலையில் முதல் குற்றவாளியாக பஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, இந்த கொலைக்கு பழிவாங்கவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஆவதம் கிராமத்தில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பஸ்வானின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், அரக்கோணம் உட்கோட்டத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று கொலைகள் நடந்துள்ளன. அனைத்தும் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. எனவே, அரக்கோணம் உட்கோட்டத்தில் சுமார் 100 ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சமீபத்திய நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். பஸ்வான் கொலை முன்விரோதம் காரணமாகவே நடந்துள்ளது. ஏற்கெனவே கொலையான லோகேஷின் உறவினர் அன்பரசன் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. கொலையாளிகளை கைது செய்ய 4 தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், பதற்றமான பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.