கடந்த ஜனவரி 30 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

லண்டன்,
இங்கிலாந்தில்  டெல்டா வகை கொரோனா பரவலால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்ததால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தும் முடிவையும் ஜூலை 17 ஆம் தேதிக்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது. 

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக உயர்ந்து வரும் சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இங்கிலாந்தில் மேலும் 22,868- பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். 

எனினும்,  தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று விடுபட்ட எண்ணிக்கை இன்று சேர்க்கபட்டுள்ளதால் தொற்று பாதிப்பு திடீரென உயர்வாக பதிவாகியிருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 அதேபோல், கொரோனா பாதிப்பால் மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,876- ஆக இருந்தது. கடந்த வாரம் திங்கள் கிழமை 10 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.