கொரோனா பெருந்தொற்று மனிதஇயல்பின் அடிப்படையையே தகர்த் திருக்கிறது என்பதுதான் இப்போதைய நிலை. 

அதற்கேற்ப மருத்துவமனைகளில் நாள் கணக்கில் பெறப்படாமல் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் சடலங்கள் காத்துக்கிடக்கின்றன. 

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் நாள் தோறும் இறக்கும் கொரோனா நோயாளிகள், விபத்துக்களில் இறப்பவர்கள், பிற காரணங்களால் இறப்பவர்கள் என சடலங்கள் தொடர்ந்து வருகின்றன. தற்போதைய சூழலில் ஒவ்வொரு நாளும் 30க்கும் அதிகமான சடலங்கள் அங்கிருந்து வெளியேற்றப் படுகின்றன. அப்படியும் சடலங்கள் வந்து குவிவதால் பிணவறையில் வைப்பதற்கு இடமில்லாமல் வார்டுகளிலேயே சடலங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றன. 

இது ஒரு காரணம் என்றால் இறக்கும் நோயாளிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வந்து சடலங்களை பெறுவதற்கு காட்டும் தயக்கம், தாமதம் ஆகியவையும் வார்டுகளில் சடலங்கள் காத்துகிடப்பதற்கு காரணங்களாகின்றன என்கின்றன மருத்துவமனை வட்டாரங்கள். நேற்று காலை கொரோனா தொற்று காரணமாக இறந்த ஒரு முதியவரின் சடலம் நேற்று மாலை வரை வார்டிலேயே காத்துக்கிடந்த சம்பவம் அதே வார்டில் உள்ள பிறநோயாளிகளை தர்ம சங்கடத்திலும், அச்சத்திலும் ஆழ்த்தியது.

எனவே, மருத்துவமனை பிண வறை அருகில் தற்காலிகமாக ஷெட் போன்ற கட்டமைப்பை ஏற்படுத்தி வார்டில் மரணமடையும் நோயாளிகளின் சடலங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.