ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து கடந்த 4 நாட்களில் 5 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு சுமார் 20 டன் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் விநியோகம் செய்வ திலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அளவில் கட்டளை மையமும், மண்டலம் வாரியாக ஆக்சிஜன் விநியோக மையங்களையும் அரசு உருவாக் கியுள்ளது. இதன்மூலம் மருத்துவ மனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் விநியோகம் தடை யில்லாமல் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழக அரசின் உத்தரவுப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சி புரம் என 5 மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள காவேரி கார்போனிக் என்ற தனியார் நிறுவனம் மூலமாக கடந்த 4 நாட்களில் மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக சுமார் 20 டன் சிலிண்டர் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

முன்பதிவு கட்டாயம்

ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப் படும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பின்னர், ராணிப்பேட்டை மாவட் டத்தில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாட்டு அறையை 04172-273188 / 273166 ஆகிய எண்களில் முன்பதிவு செய்தால் அவர்களுக்கான ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு அதற்கான நேரமும் வழங்கப்படும். அந்த குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்றால் காலி சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்பிக் கொள்ளலாம்.
ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் மேற்பார்வையில் மருத்துவர் ஒருவரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் நியமிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து காவேரி கார்போனிக் நிறுவனத்தின் உரிமையாளர் அமிர்த கணேசன் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து எங்களுக்கு தினசரி 5 டன் அளவுக்கு திரவ ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்கின்றனர். எங்கள் நிறுவனம் தரப்பில் 24 மணி நேரமும் காலி சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்பி வழங்கும் பணியை செய்து வருகிறோம். வருவாய்த் துறை அதிகாரிகள் குழுவினர் எங்கள் நிறுவனத்தில் இருந்தபடி சிலிண்டர் விநியோகத்தை கண்காணிக்கின்றனர். யாருக்கு எவ்வளது சிலிண்டர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை எல்லாம் மாவட்ட நிர்வாகமே முடிவு செய்கிறது.

எங்கள் வேலை சிலிண்டரை நிரப்பிக் கொடுப்பது மட்டுமே. இங்கு தினசரி 800 காலி சிலிண்டர் வரை நிரப்பிக் கொடுக்க முடியும். தற்போது 650 சிலிண்டர் வரை நிரப்பிக் கொடுக்கிறோம்’’ என்றார்.