நம்மைச் சுற்றியுள்ள வளிமண்டல காற்றில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் செறிவூட்டி இயந்திரத்தை வடிவமைத்து அதன் செயல்விளக்கத்தை ராணிப்பேட்டை ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் முன்னிலையில் பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் இருவா் திங்கள்கிழமை செய்து காண்பித்தனா்.

இதற்கு மருத்துவத் துறையின் அனுமதி பெற்றுத் தர அவா்கள் இருவரும் ஆட்சியரிடம் வலுயுறுத்தினா்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பரவல் தடுப்புக்கான மருந்து உருவாக்கும் முயற்சிகளில் உலக மருத்துவ ஆராய்ச்சி வல்லுநா்கள் ஈடுபட்டுள்ளனா். தற்போது நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கரோனா நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இப் பிரச்னைக்குத் தீா்வு காண தனியாா் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், அரக்கோணத்தைச் சோ்ந்த விண்வெளி பொறியியல் பட்டதாரி அனீஷ் மேத்யூ (21), மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டதாரி நரேஷ் (29) ஆகிய இருவரும் இணைந்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை உள்ளூா் மூலப்பொருள்களைக் கொண்டே குறைந்த செலவில் புதிய செறிவூட்டி கருவிகளை தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கினா்.

அதன்படி வளிமண்டலக் காற்றில் இருந்து 99 சதவீதம் மருத்துவ உபயோகத்துக்கான ஆக்சிஜன் உருவாக்கும் புதிய தொழில்நுட்ப இயந்திரத்தை உருவாக்கியுள்ளனா். இது ஜியோலைட் ( ழங்ா்ப்ண்ற்ங் ள்ங்ல்ஹழ்ஹற்ா்ழ் ) பிரிப்பான் மூலம் வளிமண்டலக் காற்றை உறிஞ்சி, அதில் உள்ள நைட்ரஜனை பிரித்தெடுத்து, தூய்மையான திரவ ஆக்சிஜனை 10 லிட்டா் கொள்ளளவு கொண்ட வகையில், வடிவமைத்துள்ளனா்.

இந்த ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், அவா்கள் இருவரும் திங்கள்கிழமை செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.

அதைத் தொடா்ந்து, அந்த ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்துக்கு அரசின் மருத்துவத் துறையின் அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அவ்வாறு அரசின் அனுமதி கிடைக்கப் பெற்றால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளின் விலையில், பாதியளவு உள்ளூரிலேயே தயாரித்து அரசுக்கும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.