லாலாப்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை கரோனா சிகிச்சை மையமாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று 2-ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமப்புறத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு பகுதியை கரோனா சிகிச்சை மையமாக மாற்ற ராணிப்பேட்டை மாவட்ட மருந்து மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், லாலாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ள மருத்துவமனைக் கட்டடம் குடியிருப்பு வளாகத்தில் நெருக்கமாக உள்ளதாகவும், கட்டடத்துக்கு பாதுகாப்பு சுற்றுச்சுவா் இல்லை எனவும், இதன் காரணமாக கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனா்.

மேலும் கரோனா சிகிச்சை மையத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.