அரக்கோணத்தை அடுத்த வெங்கடேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் ஆன்டனி (வயது 19). சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை வெங்கடேசபுரம் அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் பள்ளி கட்டிடத்தின் மேல் தளத்தில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த நேரத்தில் பள்ளிகட்டிடத்தின் மேல்தளத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆன்டனி மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.