ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மையமாகச் செயல்பட்டு வருகிறது. 

அங்கு 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குச் சரியான முறையில் உணவுகள் வழங்கவில்லை என்றும் வழங்கும் உணவுகள் தரமாக இல்லை எனவும் கழிப்பறை சுத்தமாக இல்லை எனவும் கூறி கடந்த 26ஆம் தேதி கரோனா சிகிச்சை மைய வளாகத்தில் நோயாளிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றித் தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் காமாட்சி சம்பவ இடத்திற்கு வந்து நோயாளிகளிடம் பேசித் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். 


இந்நிலையில் இன்று காலை மீண்டும் கோவி-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை மையத்தின் வெளியே சென்று ஆற்காடு-செய்யார் சாலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்று கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதுபற்றித் தகவலறிந்த கலவை சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நோயாளிகளின் சமரசம் செய்து வைத்து ஆற்காடு தாசில்தார் காமாட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.