அரக்கோணம்:''ஒரே நாளில் எல்லாவற்றையும் செய்ய முடியாது. படிப்படியாகத் தான் செய்ய முடியும்,'' என, கைத்தறி துறை அமைச்சர் காந்தி கூறினார்.

தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனையை நேற்று ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கொரோனா பரவாமல் தடுக்க, அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். ஒரே நாளில், எல்லாவற்றையும் செய்ய முடியாது.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில், 'சிடி' ஸ்கேன் வசதி இல்லை. 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது. இத்தொகுதியிலும், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் தான் எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.அப்போது அவர்கள் எதையும் செய்யவில்லை. படிப்படியாகத் தான் எல்லா வசதிகளையும் ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.