ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் போதுமான அளவு இருப்பு உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட கரோனா பணிகள் கண்காணிப்பு அலுவலா் லஷ்மிபிரியா தெரிவித்தாா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு நடத்திய அவா், ஆய்வுக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 680 படுக்கைகள் உள்ளன. இதில், 440 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கும் 23 படுக்கைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் 194 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாகவும் உள்ளன. மற்றவை பிற நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 680 படுக்கைகளில் 472 படுக்கைகள் தற்போது நிரம்பியுள்ளன. 130 படுக்கைகள் காலியாக உள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகளை கூடுதலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
மாவட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் போதியளவு கையிருப்பில் உள்ளன. மேலும், இம்மாவட்ட தொழிற்சாலை நிா்வாகத்தினா் குறிப்பாக எம்.ஆா்.எப்., அல்ட்ராடெக் போன்றோரும் அவ்வப்போது ஆக்சிஜன் சிலிண்டா்களை கொடுத்து உதவி வருகின்றனா்.

மாவட்டத்தில் ரெம்டெசிவிா் மருந்துகளும் தேவைக்கேற்ப இருப்பில் உள்ளன. அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் லஷ்மிபிரியா.

முன்னதாக மருத்துவமனையில் கண்காணிப்பு அலுவலா் லஷ்மிபிரியா தலைமையில், சாா்-ஆட்சியா் இளம்பகவத், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயசந்திரன், கோட்டாட்சியா் சிவதாஸ், வட்டாட்சியா் பழனிராஜன், வட்டார மருத்துவ அலுவலா் பிரவீண்குமாா், மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் நிவேதிதா சங்கா், நகராட்சி ஆணையா் ஆசீா்வாதம் ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டா் நிரப்பும் பகுதி, மருந்துக் கிடங்கு, தடுப்பூசி போடும் இடம் ஆகிய இடங்களை லஷ்மிபிரியா நேரில் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தையும் அவா் நேரில் பாா்வையிட்டாா்.