அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டது.  

இந்நிலையில், கொரோனா தடுப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று (ஏப். 12) ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர். பி. உதயகுமார்,  சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் கோ. பிரகாஷ், பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.  

இந்தக்கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் பழனிசாமி தெரிவித்தாவது:-

தமிழகத்தல் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்படும்.

சென்னையில் காய்ச்சல் 400 ஆக முகாம்கள் அதிகரிக்கப்படும். வீட்டு வீடாக சென்று பணியாளர்கள் ஆய்வு செய்யவேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

குறிப்பாக, முக கவசங்கள் அணியவேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும்.
ஏப்ரல் 10 வரை 37.80 லட்சம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் 2 வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்.

பொதுமக்களும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைப்பதா அல்லது தேவையான முன்னெச்சரிக்கையுடன் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்தும் எடுத்த முக்கிய முடிவுகள் குறித்தும் சில நாட்களில் அதிகாரபூர்வ தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.