அடுத்த இரண்டு வாரங்கள் சுகாதாரத் துறைக்கு மிகவும் சவாலானது என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை  டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி  விழிப்புணர்வு வாகனத்தை  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தை பொறுத்தவரை சில நாட்களாக கொரோனா அதிகரிப்பதை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செயல்படுத்தி வருகின்றது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இருப்பினும் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானது.

 இதனடிப்படையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் யாரெல்லாம் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியுமோ அந்த நிறுவனங்கள் "வொர்க் பிரம் ஹோம்" முறையை நடைமுறைப்படுத்தலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

மேலும் “40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, அனைவரும் நன்றாக உள்ளனர்,  தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். நாளை தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் நெருங்கி உள்ள நிலையில்,  8 ஆயிரம் தாண்டி சென்றால் என்ன  நடவடிக்கைகள்  மேற்கொள்வது என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும்” என்று தெரிவித்தார்.