தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என பரவும் தகவல் பொய்யானது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம் கொரோனா பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை செயலர் ராதகிருஷ்ணன், "மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கடந்தாண்டு தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லாத நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது அது தேவையில்லை. அதேவேளையில், தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால், அத்தியாவசியமற்ற பணிகளுக்கு படிப்படியாக கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை, வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டமுடிவில் எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இரவு நேர முழு ஊரடங்கு அமல் அல்லது திரையரங்கம் , மால் , சந்தைகள் , பொது நிகழ்ச்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது,