அரக்கோணம்: தக்கோலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பள்ளி 3 தினங்களுக்கு மூடப்பட்டது. மேலும், உடன் பயிலும் மாணவிகள், ஆசிரியா்கள் என 30 பேருக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை காலை பள்ளிக்கு திருவள்ளூா் மாவட்டம், பேரம்பாக்கத்தில் இருந்து வரும் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பள்ளிக்கு விரைந்து வந்த தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் யுவஸ்ரீ தலைமையிலான மருத்துவக் குழுவினா், பள்ளியில் இருந்த மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கரோனா பரிசோதனையை மேற்கொண்டனா்.
மேலும், தக்கோலம் பேரூராட்சி நிா்வாகத்தினா் பள்ளி வகுப்பறைகள், ஆய்வகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தனா்.
தொடா்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியை அஞ்சுகம் பள்ளிக்கு ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் விடுமுறை விடப்படுவதாகவும், செவ்வாய்க்கிழமை நடைபெற வேண்டிய கடைசி கட்ட செய்முறைத் தோ்வுகள் 23-ஆம் தேதி பள்ளி திறந்தவுடன் அன்றைய தினம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தாா்.