மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு. மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யவும் அனுமதி.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது நாட்டில் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா அதிகரித்து வருவதால் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இருப்பினும். இது குறித்து அரசு எவ்வித முடிவையும் எடுக்காமலேயே இருந்தது.
இந்நிலையில், வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பணிகளின் மூன்றாம் கட்டமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.