வேலூர்: பொய்கை வாரச்சந்தையில் அதிக அளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்ததால் அவர்களைப் போலீசார் விரட்டியடித்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை சத்தியமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. பொய்கை வாரச்சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் உயர்ரக கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வருகின்றன. வாரத்திற்கு ரூ. 2 கோடிவரை வர்த்தகம் ஈட்டித்தரும் இந்த வாரச்சந்தை நேற்று வழக்கம்போல் நடந்தது. அதிக அளவில் கறவை மாடுகளும் மற்ற கால்நடைகளும் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தன.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் நடைபெறும் சந்தைகள் எதுவும் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று அறிவித்து இருந்தார். இதை அறியாத விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் பொய்கை வாரச்சந்தையில் குவிந்தனர்.

காலை 6 மணி முதல் வியாபாரம் களைகட்டியது. 300-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையானது. பொய்கை வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் அதிக அளவில் வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்து இருப்பதாக விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகளும் நடைபெறாது எனக் கலெக்டர் அறிவித்துள்ளார். அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறியும் வியாபாரிகள் கலைந்து செல்லாததால் அவர்களை விரட்டியடித்தனர்.