ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்களை அழித்தல், கட்சிக் கொடிகள், பதாகைகளை அகற்றும் பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்து, உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தும் பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, வாலாஜாப்பேட்டை நகரம், அம்மூா் பேரூராட்சி, ஜம்புகுளம் கூட்டுச் சாலை, சோளிங்கா் நகரம், பாணாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அகற்ற வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

அதன்படி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் இணைந்து, சுவா் விளம்பரங்களை அழித்தல், கட்சிக் கொடிகள், கட்சி பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினா் ஆகியோருக்கு தோ்தல் நடத்தை விதிகளை சரியாக அமல்படுத்துவதற்கு உரிய அறிவுரைகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் மற்றும் வருவாய்த் துறையினா் உடன் இருந்தனா்.