பரத் நடித்த ‘காதல்’ திரைப்படத்தில் விருச்சககாந்த் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் பரத், சந்தியா நடிப்பில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘காதல்’. ஒரு மெக்கானிக் இளைஞனுக்கும், வசதிப்படைத்த குடும்ப பெண்ணுக்கும் இடையேயான காதலை யதார்த்தமாக திரையில் பதித்த இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்தப்படத்தில் வரும் மேன்ஷன் காட்சி ஒன்றில், சினிமாவில் இயக்குநராக வர முயற்சிசெய்து கொண்டிருக்கும் ஒருவரை நடிகராக வர முயற்சிக்கும் இரண்டு இளைஞர்கள் சந்திக்க வருவர்.

அந்த ஒருவரில் விருச்சககாந்த் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் டில்லி பாபு (35). அந்தக் காட்சியில் “நடிச்சா ஹீரோதான் சார்” என்று இவர் பேசிய வசனம் மிகப்பிரபலம். அதனைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு சரிவர வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

ஏற்கெனவே வருமானமில்லாமல் தவித்துக்கொண்டிருந்த பாபுவின் பெற்றோரும் ஒரு கட்டத்தில் இறந்துவிட அவர் மனதளவில் உடைந்துபோனதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் நேற்று சூளை விவி நகர் ஆஞ்சநேயர் கோயில் எதிரில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் தூங்கிக்கொண்டிந்தபோதே பாபு உயிரிழந்துள்ளார்.