மாற்றுத்திறனாளிகள் , 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . இதனையொட்டி தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது . 

அதேசமயம் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் , மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது . இதில் மற்றொரு வசதியாக , இவர்கள் வீடுகளில் இருந்தே வாக்களிக்கவும் , அவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது . அதன் அடிப்படையில் , வீடுகளுக்கே சென்று வாக்குச்சாவடி மைய அலுவலர் , வருவாய்த்துறை , காவல்துறை , தேர்தல் நுண்பார்வையாளர் உட்பட மொத்தம் 5 பேர் கொண்ட குழுவினர் வீடியோ கிராபருடன் சென்று நேரடியாக தபால் வாக்குகளை பெற உள்ளனர் . 

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில் , “ 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் , மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க ஏற்கனவே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது . இதில் வீடுகளில் இருந்தே வாக்களிக்க விருப்பம் உள்ளவர்களிடம் மனு பெறப்பட்டுள்ளது . அவர்களின் விவரங்கள் சேகரித்து , தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் .

ஓரிரு நாட்களில் , வாக்குச்சாவடி அலுவலர் , வருவாய்த்துறை , காவல் துறை , தேர்தல் நுண்பார்வையாளர் , சம்பந்தப்பட்ட ஏரியா விஏஓ ஆகியோருடன் , வீடியோ கிராபரையும் அழைத்துக்கொண்டு , வாக்காளர் யாருக்கு விருப்பப்படுகிறாரோ , அவருக்கு வாக்களித்து தபால் வாக்கினை மூடி சீல் வைத்து பெறப்படும் . அதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் குழுக்கள் தயாராக உள்ளனர் . விரைவில் இப்பணிகள் தொடரும் இவ்வாறு கூறினர் .