பறக்கும் படை , நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்யும் வீடியோ பதிவுகளை தினந்தோறும் ஒப்படைக்க வேண்டும் ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டருமான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் . இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 

அதில் , கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமைதாங்கி பேசியதாவது : தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றும் பரிசுப் பொருட்கள் , மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 

ஆற்காடு தொகுதிக்கான குழுவினரைதவிர்த்து மற்ற தொகுதிகளில் உள்ள குழுவினர் என எவ்வித கைப்பற்றுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை . தணிக்கையில் ஈடுபடும் குழுவினர் பணம் எடுத்துச் செல்வது மட்டுமல்லாமல் எங்கேனும் பதுக்கி அல்லது சேமித்து வைத்துள்ள பணம் குறித்து உள்ளூர் தகவல் அறிந்தவர்கள் மூலமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் , தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தங்களது கண்காணிப்பு பணிகளை வீடியோ பதிவு செய்து சம்பந்தப் பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள துணை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதில் , டிஆர்ஓ ஜெயசந்திரன் , கலெக்டர் அலுவலக பொது மேலாளர் விஜயகுமார் , தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெயகுமார் மற்றும் அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர் .