ராணிப்பேட்டை : 
நாட்டில் , குஜராத் , மகாராஷ்ட்ரா , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் 2 வது அலை உருவாகி உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது . 

அதன்படி தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது . 

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில் , கொரோனா வைரஸ் தொற்று 2 வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது . மேலும் , அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது . 

அதன்படி , தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிப்பு இயந்திரங்கள் , கையால் இயக்ககூடிய தெளிப்பான்கள் ஆகியவற்றை பழுதுகள் நீக்கி தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் . மேலும் , கிருமிநாசினி மருந்துகள் , பிளிச்சிங்பவுடர் ஆகியவை இருப்புவைத்திருக்க வேண்டும் , என்று உத்தரவிட்டுள்ளது . 

விரைவில் பொது தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் . எனவே , முககவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் . முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர் .