ஆற்காடு அருகே சோதனைச்சாவடியில் நடைபெற்ற வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஆற்காடு அடுத்த சின்ன சலமநத்தம் சோதனைச்சாவடியில் கூட்டுறவு சார் பதிவாளர் பஞ்சாட்சரம் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆற்காடு சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.