இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முடக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளுக்கான சேவையை தவிர அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முடக்கப்பட்டது.
தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த பொது முடக்கத்தை வருகிற 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதே நேரம் அடுத்தடுத்து ஊரடங்கு நடைமுறையின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்மை காலங்களில் உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.
இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. 

குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் போல மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற விவாதங்கள் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இந்த நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்றார். மேலும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை எண்ணிப் பார்க்க வேண்டும் எனவும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தேவை எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.