ராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு அடுத்த வேப்பூர் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமல்ராஜ் ( 45 ) . இவர் மேல் விஷாரத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். 

இந்நிலையில் , நேற்று முன்தினம் கமல்ராஜ் தனது உறவினர் ரகுபதி என்பவருடன் வாக்கிங் சென்றுள்ளார் . அப்போது , கீழ்விஷாரம் உஸ்மான் தெருவைச் சேர்ந்த ஆரிப் என்பவர் வேகமாக ஓட்டி வந்த பைக் இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் . 

அவர்களை அங்கிருந்த பொது மக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் . அங்கு பரிசோதித்த டாக்டர்கள் , கமல்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . ரகுபதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . 

இதுகுறித்து கமல்ராஜின் மனைவி ஜான்சிராணி ஆற்காடு டவுன் போலீசில் நேற்று புகார் செய்தார் . அதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார் .