வழக்கமான தேர்தலை காட்டிலும் இந்த முறை கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக 13 புதிய பொருள்கள் வாக்குசாவடிகளுக்கு வழங்கப்பட உள்ளன ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர் . கிளாட்ஸ்டன் கூறியுள்ளார் .

அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரக்கோணம் தொகுதி வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் அவர் பேசியது : ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் ) தனி ) தொகுதியில் 317 வாக்குசாவடிகளும் , சோளிங்கர் தொகுதியில் 387 வாக்குசாவடிகளும் , ராணிப்பேட்டை தொகுதியில் 375 வாக்குசாவடிகளும் , ஆற்காடு தொகுதியில் 368 வாக்குசாவடிகளுமாக மொத்தம் 1,447 வாக்குசாவடி மையங்கள் உள்ளன .

இவ்வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய கடந்த 13 - ஆம் தேதி கணினி மூலம் குலுக்கல் முறையில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . வழக்கமான தேர்தலைக் காட்டிலும் இந்தமுறை கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக 13 புதிய பொருள்கள் வழங்கப்பட உள்ளன .

வாக்குசாவடியில் வாக்காளர்களை வரிசையில் நிற்க வைக்காமல் டோக்கன் கொடுத்து சமூக இடைவெளியுடன் ஒரு பகுதியில் அமர வைத்து ஒவ்வொருவராக அழைத்து உடல் வெப்பம் பரிசோதனை , கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து , எந்த கையில் வாக்களிக்கிறாரோ அந்த கைக்கு கையுறை வழங்கி அதை அணிய வைத்த பின்பு , வாக்குப் பதிவு செய்தவுடன் அதற்கென்று ஒதுக்கப்பட்ட கூடைகளில் கையுறைகளை அகற்றி சேகரிக்க வேண்டும் . பின்னர் அவ்வாறு சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகளை அதற்கென்று ஒதுக்கப்பட்ட குழுக்களிடம் பாதுகாப்பாக வழங்கி அப்புறப்படுத்த வேண்டும் . 

வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை நேரலையாகத் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கேமராக்களில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் அமரும் இடமும் , வாக்குச்சாவடி மையத்தின் பெயர் மற்றும் எண் உள்ளிட்ட நிகழ்வுகள் தெரியும் வகையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரியாத வகையிலும் அமைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ,

இக்கூட்டத்தில் அரக்கோணம் தொகுதி தேர்தல் பார்வையாளர் கிரிஜா , மண்டல தேர்தல் அலுவலர் ( தபால் வாக்குகள் ) சேகர் , அரக்கோணம் தொகுதி தேர்தல் அலுவலர் சிவதாஸ் , வட்டாட்சியர் பழனிராஜன் , வட்டாட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) ஆனந்தன் , துணை வட்டாட்சியர் அருள்செல்வன் , நகராட்சி ஆணையர் ( பொறுப்பு ) ஆசீர்வாதம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர் .